சனி, 26 மார்ச், 2011

இலவசம். இலவசம்..இலவசம்..

            சிலருக்கு சில பொருட்கள் இலவசம் என்ற நிலையிலிருந்து, இப்போது, பலருக்கு பல பொருட்கள் இலவசம் என்றபடி அரசியல்வாதிகளின் தேர்தல் பொருளாதாரம் வளர்ந் திருக்கிறது. இதை, இனி எதுவரை நீட்டிக்க முடியும்? எல்லாருக்கும் தினமும் பஸ்சில், ரயிலில், விமானத்தில் இலவச பயணம். எந்த ஜவுளி கடைக்கும் போய், ஜவுளிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். மளிகைக் கடைகளில் செருப்பு உட்பட எல்லா பொருட்களும் இலவசம். யாரும், எதற்கும் பணம் கொடுக்க வேண்டாம். மின்சாரம், பால் எல்லாமே இலவசம். 

             எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தால், மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்களே... அவர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப் பற்றவர்களாக வளர்ப்பார்களே, அது ஒரு சமுதாய அவலமாயிற்றே என்று சிந்திக்கத் தெரியாதவர்களா நம் அரசியல்வாதிகள்... எல்லாம் தெரிந்தவர்கள் தான். ஆனால், சமுதாயத்தின் பொருளா தாரத்தை இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் மூலம் குலைத்தால் தான் சுரண்ட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். எந்த முதல்வர், தான் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து அதைக் கொடுக்கப் போகிறார்... எல்லாம் வரி கொடுப் பவர்களின் பணம் தானே. ஆனால், இலவசங்கள், மக்கள் தரும் வரிப் பணத்திலிருந்து வருவதாக எந்தப் புண்ணிய வான் அரசியல்வாதியும் சொன்னதாகத் தெரியவில்லை. தங்கள் படத்தை, பெயரையும் போட்டுக் கொண்டு, இதையெல்லாம் தாங்களே தருவதாக பசப்புகின்றனர்.

             அண்ணாதுரை தன் நிதிநிலைக் கொள்கை, Tap the rich; put the poor என்று சொன்னதாகச் சொல்வர். அவரது பெயரை அனுதினமும் சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்க அரசியல்வாதிகள், "ஏழை மக்களே! உங்களுக்கு உதவுவது, வசதியான உங்கள் சகோதரர்களே' என்று ஏன் எடுத்துச் சொல்வதில்லை? பணக்காரர்களுக்கு, பெரிய தொழிலதிபர்களுக்கு சலுகைகள் செய்யும் வழியில், தம் சொந்த கஜானாவை அரசியல்வாதிகள் வளப்படுத்திக் கொள்கின்றனர். நலத்திட்டங்கள் என்ற பெயரில் அரசு கஜானாவிலிருந்து வெளியேறும் பணமும் வெவ்வேறு சதவீதங்களில் அரசியல்வாதிகளையும், அதிகாரி களையும் திருப்திபடுத்தி விட்டே செல்கிறது. இதைவிட பெரிய தேசியத் திருட்டு வேறு எதுவும் இல்லை. இந்தத் திருட்டை செய்து கொண்டு ஆட்சியில் இருப்பவர்களுக்கு, ஒரு பிக்பாக்கெட்காரனை போலீஸ் மூலம் பிடித்து கோர்ட் மூலம் தண்டனை தரச் செய்வதற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.

              அரசாங்கத்தின் பணம், ஆள்பவர்களின் பணம். திருட்டுத்தனமாக சேர்த்ததில் ஏதோ ஒரு சொற்ப சதவீதம், மக்களுக்கு, மறைமுகமாக ஓட்டுக்குப் பணம் என்ற பெயரில் தரப்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன், அரசாங்க செலவில் அடுத்த தேர்தல் வரை விசுவாசத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்க செலவில் சலுகைகள், மானியங்கள் தரப்படுகின்றன. இவை, அடித்தட்டு மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கி விடுகின்றன. "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்' என்ற வாசகத்தின் பொருள், ஏழைகள், ஏழைகளாகவே இருந்தால் தான் எங்கள் இலவசங்களைப் பெற்று, எங்களுக்கே ஓட்டளிப்பர் என்பது தான். சுயமரியாதை, இனமானம் என்றெல்லாம் பசப்பு வார்த்தைகளில் பேசுபவர்களே, அடித்தட்டு மக்களை ஏழை களாகவும், சோம்பேறிகளாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். இது, மக்களுக்கு தெரிந்திருக் கிறது; புரிந்திருக்கிறதா என தெரியவில்லை. "அறியாமை ஆனந்தம்' என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. பாமரர்களின் அறியாமை, அரசியல்வாதிகளின் ஆனந்தம். வரி செலுத்துபவர்களுக்கு வருவதில்லை ஆனந்தம்.


         வீணடித்தால் அபராதம்: சலுகை விலை அரிசி போய், இலவச அரிசி வந்திருக்கிறது. அதை எல்லாரும் பயன்படுத்துவதில்லை. விற்றுவிடுகின்றனர். ஆனால், மட்டமான அரிசி விளைவதில்லை. நம் பராமரிப்பு அவலமானது. அரிசியை மட்டுமல்லாமல் பிற தானியங்களையும் வீணாக்குகிறோம். பொருளாதாரம் நமக்குப் புரிவதில்லை. 

இதோ ஒரு நிகழ்ச்சி:

      ஐந்தாறு இந்திய இளைஞர்கள், ஒரு ஜெர்மானிய உணவகத்தில் நுழைந்தனர். மேஜைகளில் உட்கார்ந்திருந்த ஜெர்மானியர், பண்டங்களை வீணாக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நம் இளைஞர்கள், ஒரே நேரத்தில் பல பண்டங்களை வரவழைத்தனர். மூன்றில் ஒரு பகுதியை வீணடித்தனர். "பில்' கொடுத்துவிட்டு எழுந்து போகும்போது, பக்கத்து மேஜையில் இருந்த ஒரு பெண்மணி, "ஏன் இப்படி உணவுப் பண்டங்களை வீணடிக்கிறீர்கள்' என்று கேட்க, அவர்களுக்குள் வாக்குவாதம் வந்தது. இந்திய இளைஞர்கள் சொன்னார்கள், "அதனால் உனக்கென்ன நஷ்டம்? நாங்கள் மொத்தத்திற்கு பணம் கொடுத்துவிட்டோமே...' உடனே அந்தப் பெண்மணி, மொபைல் போனில் யாரிடமோ பேச, அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த ஜெர்மானிய போலீஸ்காரர், "ஐம்பது மார்க் அபராதம் விதிக்கிறேன். உங்களிடம் பணம் இருக்கலாம். ஆனால், இங்கே வீணாகியிருப்பது ஜெர்மானியர்களின் உழைப்பு. உணவுக்கு தவிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்' என்றார். அபராதத்தைக் கட்டிய இந்திய இளைஞர், அதன் பிரதியை நண்பர்களிடம் கொடுக்க, அதை அவர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டிவைத்திருக்கின்றனர். சிக்கனத்தை நினைவுபடுத்த! இதேபோல், நம் பணத்தை வீணடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, அபராதம் விதிக்கலாமா? தாராளமாக. எவ்வளவு வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம். அவர்களும் அதைக் கட்டிவிடுவர், நம் பணத்திலிருந்து!

ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.