சியாச்சின் போர் (1982)
சியாச்சின் பனிமலை பிரதேசம் உலகில் துருவப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவைகளில் இரண்டாவது மிகவும் நீளமான பனிமலை பிரதேசம். அது நூப்ரா மற்றும் ஷையோக் நதிகளால் உருவானது.
ஷையோக் நதியிலிருந்து உருகும் பனியினால் ஆன நீர் தான் சிந்து நதியின் மூலமாக இருக்கிறது. அங்கு குளிர் காலங்களில் மைனஸ் - 50 டிக்ரீ செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். அதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை பயன்படுத்தி பாகிஸ்தான் அந்த பகுதியை தனது என கூறியது. அத்தகைய புகழ் பெற்ற பகுதியில் உள்ள பனிமலை சிகரங்களில் பல மலையேற்ற வீரர்கள் ஏறுவதற்கு பாகிஸ்தான் அரசினை அனுமதி கேட்டனர். அரசும் அவர்களுக்கு அனுமதி அளித்தது. அவர்களும் பாகிஸ்தானின் அனுமதியுடன் அந்த பகுதிக்கு வந்து மலை ஏற முயன்றனர். அதே நிலை தொடர்ந்ததால் மெல்ல மெல்ல அப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பாகிஸ்தான்.
அமெரிக்காவின் உதவியுடன் தனது தேசிய வரை படத்தையும் திருத்தி வெளியிட்டுக் கொண்டது.இதனை அறிந்த இந்திய அரசு, 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி "Operation Meghdoot" என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. அதன்படி, கலோனல் N. குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்களை முழுவதுமாக விரட்டி, அப்பகுதியில் முழு பாதுகாப்பிற்கு வித்திட்டது. அப்பகுதியை சேர்ந்த 900 சதுர மைல்கள் முழுவதுமாக இந்தியா வசம் மீண்டும் வந்தது.
நான் முன்னரே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலை காரணமாக அப்பகுதியில் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற இயலாதாகையால் வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு பணியாற்றுகிறார்கள். அப்பகுதியில் காவலில் இருக்கும் பொழுது நமது வீரர்கள் தட்ப வெட்பம் காரணமாகவோ இல்லை எதிரிகளின் தாக்குதல்களிலோ இறந்தால் அவர்களின் சடலங்களுக்கு அங்கேயே வீர மரியாதை அளிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது. ஏனென்றால் அங்கிருந்து அவர்களின் சடலங்களை எடுத்து செல்வது கடினம்.
இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், இன்றும் அப்பகுதியில் பணியாற்றுவதை நமது வீரர்கள் மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறார்கள். சர்ச்சைக்குறிய அப்பகுதியை பார்வையிட சென்ற முதல் இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், முதல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அப்பகுதியினை மீண்டும் மீட்க பாகிஸ்தான் 1990, 1995, 1996 மற்றும் 1999 (லாகூர் ஒப்பந்தத்திற்கு முன்னர்) ஆம் ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.
கார்கில் போர் (1999)
சியாச்சின் பனிமலை பிரதேசத்தை இந்தியா மீண்டும் அடைந்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் நடத்தியது தான் கார்கில் ஊடுறுவல். கார்கில் போரினை பற்றி பார்ப்பதற்கு முன் அப்பகுதியின் முக்கியத்துவத்தை பார்க்கலாம். கார்கில் பகுதி காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தியப் பகுதி. அதனால் எல்லையை கடந்து அப்பகுதிக்கு செல்வது எளிது. ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் சாலை கார்கில் வழியாகத்தான் செல்கிறது.
அதனால் அப்பகுதியை கைப்பற்றினால் ஸ்ரீ நகரை எளிதாக மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து விட முடியும். மேற்கூறிய காரணங்களினால் சர்வதேச எல்லையை தாண்டி ஊடுறுவி கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க முடிவு செய்தது பாகிஸ்தான் இராணுவம்.அணுகுண்டு சோதனைகளால் சீர் கெட்டிருந்த இரு நாட்டு உறவை புதுப்பிக்கும் நல்லெண்ணத்துடன் வாஜ்பாய் கையெழுத்திட்ட லாகூர் ஒப்பந்தத்தை காற்றில் பறக்க விட்டு முன்னால் புன்னகையுடன் கை குலுக்கி பின்னால் கொலை வெறியுடன் முதுகில் குத்தும் ஈன செயலை கார்கிலில் செய்தது பாகிஸ்தான். அப்பொழுது இராணுவ தலைமையில் இருந்த முஷாரஃப் அவர்களின் திட்டப்படி ஆயுதம் தாங்கிய சுமார் 5000 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஊடுறுவினர். அவர்களுடன் காஷ்மீர் தீவிரவாத குழுக்களை சேர்ந்த சுமார் 1000 தீவிரவாதிகளும் இணைந்தனர். நான் முன்னரே குறிப்பிட்ட ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் NH-1A சாலையை ஒட்டியுள்ள மலை சிகரங்கள் பலவற்றை அவர்கள் கைப்பற்றினர்.
அதனால் அந்த சாலையில் பல பகுதிகள் முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.இதனை அறிந்த இந்தியப் படையினர் அங்கு விரைந்தனர். "Operation Vijay" என்ற அவர்களின் திட்டப்படி முதலில் அந்த சாலையை மீட்க முனைந்தனர். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. அப்பகுதி முழுவதும் பாகிஸ்தானியர்கள் கண்ணிவெடிகளை புதைத்திருந்தனர். இந்தியர்கள் முதலில் அவைகளை கண்டுபிடித்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 9000 கண்ணிவெடிகள் அப்புரப்படுத்தப் பட்டன.
பாகிஸ்தானியர்கள் வசம் இருந்த ஒவ்வொரு சிகரமாக மீண்டும் கைப்பற்றி அந்த சாலையை மீண்டும் இந்திய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
அதன் பிறகு ஊடுறுவிய பாகிஸ்தானியர்களை முழுவதுமாக எல்லைப் பகுதியில் இருந்து துரத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 1965 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்று சர்வதேச எல்லையை இம்முறை எக்காரணம் கொண்டும் கடக்க கூடாது என்று முடிவு செய்யப் பட்டது. இந்திய விமான படையினர் வான் வழி தாக்குதலை தொடங்கினர்.
அதே நேரத்தில் இந்திய பீரங்கி படையினர் போஃபர்ஸ் மற்றும் ஹோவிட்ஸர் பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தானியர் வசம் இருந்த தளங்கள் ஒவ்வொன்றாக மீட்கத் தொடங்கினர். சர்வதேச எல்லையை கடக்க கூடாது என்று முடிவு செய்தமையால் அவர்களை சுற்றி வளைப்பது இயலாமல் போனது. தாக்குதலினால் அவர்களை பின்வாங்க செய்வதே அவர்களை விரட்ட ஒரே வழியாகவும் இருந்தது. அதற்கு பெரிதும் உதவின இந்திய பீரங்கிகள்.
ஒரு சில தளங்களை எளிதாகவும், வேறு சிலவற்றை போராடியும் மீட்க வேண்டி இருந்தது. உதாரணத்திற்கு Tiger Hill என்ற மலை சிகரத்தை கடினமான போராட்டத்தின் பின்னரே இந்தியர்களால் அடைய முடிந்தது.
அதன் தொடர்ச்சியாக நடந்த சண்டையில் இந்தியா மூன்று விமானங்களை இழந்தது. MiG-27 விமானம் இயந்திரப்ப கோளாரினால் கீழே விழுந்து நொறுங்கியது. MiG-21, Mi-8 ஆகிய விமானங்கள் பாகிஸ்தனியர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டன. இந்திய வான் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த விமானங்களை அவர்கள் சுட்டது மிகவும் கேவலமான செயலாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினர் காராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்து அதனை மற்ற கடல் பகுதிகளில் இருந்து துண்டித்தனர். இதுவும் இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்தே நடைபெற்றது.
இந்தியர்கள் சுமார் 80 சதவிகித பகுதிகளை மீட்டெடுத்த நேரம், இன்னும் 6 நாள் போருக்கு தேவையான தளவாடங்களே பாகிஸ்தானியர்கள் வசம் இருந்தது. இதனால் பாகிஸ்தானியர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த தீட்டிய திட்டம் அமெரிக்க உளவுத்துறையினரால் கண்டு பிடிக்கப் பட்டது.
அதைத் தொடர்ந்து கிளின்டன் கடுமையான எச்சரிக்கை ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு விடுத்தார். அந்த எச்சரிக்கையினால் வேறு வழி இல்லாமல் தனது படையினரை இந்தியப் பகுதிகளில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டார் ஷெரிஃப்.
ஷெரிஃப் அவர்களின் இந்த முடிவு பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இராணுவ தலைவரான முஷாரஃப், ஷெரிஃப் அவர்களை பதவியிலிருந்து இறக்கி இராணுவ ஆட்சி அமைக்க வித்திட்டதும் இதுவே.
பாகிஸ்தான் இராணுவத்தினர் வெளியேறினாலும், அவர்களுடன் சேர்ந்து ஊடுறுவிய United Jihad Council என்ற தீவிரவாதக் குழு வெளியேற மறுத்து போரை தொடர்ந்தது. அவர்கள் மீது இந்தியர்கள் நடத்திய தாக்குதலினால் ஒரே வாரத்தில் அவர்கள் முழுவதுமாக ஒழிக்கப் பட்டனர்.அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி 527 இந்திய உயிர்களையும், சுமார் 4000 பாகிஸ்தானிய உயிர்களையும் குடித்த பிறகு ஒரு வழியாக கார்கில் போர் முடிவிற்கு வந்தது.
அப்பொழுது பாகிஸ்தான் ஊடுறுவிய இந்திய பகுதிகளில் இந்திய இராணுவ வீரர்கள் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே முகங்களில் இருந்து கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு பல வித சித்தரவதைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பது மருத்துவ ஆய்வில் வெளியானது. போரில் சிறைக் கைதிகளை கண்ணியமாக நடத்த தவறிய பாகிஸ்தானின் செயல் உலக நாடுகளால் கண்டிக்கப்பட்டது. இந்தியப் பிரதமரின் லாகூர் நல்லினக்கப் பயனத்தையும், அவர் இந்திய பாகிஸ்தான் பேரூந்து போக்குவரத்து தொடங்கியதையும் மீறி சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தானியர்களின் செயல் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை கெடுத்தது.
இதைப் பற்றி அமெரிக்க அதிபர் கிளின்டன் தனது சுயசரிதையில் "Sharif’s moves were perplexing" என்கிறார். ஒரு வேளை சர்வதேச எல்லையை கடப்பது என்று நாம் முடிவு செய்திருந்தால் இந்தியத் தரப்பில் நேர்ந்த உயிரிழப்புகளை வெகுவாக குறைத்திருக்கலாம். ஆனாலும் அந்த முடிவினால் அணுகுண்டு சோதனையின் பிறகு நாம் இழந்திருந்த வல்லரசு நாடுகளின் நன்மதிப்பை மீண்டும் பெற்றது இந்தியா. இதுவே இந்தியா சந்தித்த கடைசி போர் ஆகும். அதன் பிறகு அதிர்ஷ்டவசமாக இந்தியா எந்தவிதமானதொரு பெரிய போரையும் சந்திக்கவில்லை.
நண்பர்களே!
போர் ஓய்ந்து விட்டாலும் முழூ அமைதி எல்லை பகுதிகளில் நிலவவில்லை. ஆங்காங்கே பல சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கர வாதமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இனி இது தொடர வேண்டாம். இதுவே இறுதியாக இருக்கட்டும். கார்கிலில் நடந்த போரே இந்தியா சந்தித்த இறுதிப் போராக இருக்கட்டும். பணி படர்ந்த அக்ஸாய் சின், சியாச்சின் பகுதிகளில் காவலில் இருக்கும் நமது இராணுவ வீரனை நினைத்து பாருங்கள்.
உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அவனது வாழ்வு . இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் அவனது மனைவி. அவன் இறந்தால் அவனது உடலை கூட பார்க்க உத்திரவாதம் இல்லாத அவனது குடும்பத்தினரின் நிலை ?. தனது ஒப்பந்தம் முடிந்து வந்தால் அவனுக்கு காத்திருக்கும் செக்யூரிட்டி வேலையிலோ இல்லை காண்ஸ்டபிள் வேலையிலோ காலம் தள்ள வேண்டிய அவனது சூழ்நிலை... போரில் மட்டும் இல்லாமல் தினமும் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதிலும் அவன் தான் முதன்மையில் நிற்கிறான். மேலும் இயற்கை சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் இராணுவ வீரனின் உதவி மகத்தானது. இத்தகையவனுக்கும் அவனது வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்க இங்கே யாரும் இல்லை.
அவன் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து இட ஒதுக்கீடு கேட்கப் போவதும் இல்லை. அவனால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வரும் மனித உரிமை காப்பாளர்கள் தீவிரவாதியினால், அவன் கொல்லப்படும் போது வருவதில்லை. அந்த மனித உரிமை காப்பாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கூட அவன் தான் காப்பாற்றுகிறான்.
அவன் தனது உயிரை பனையம் வைத்து தமக்கு அளிக்கும் பாதுகாப்பினை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டே இந்திய இறையாண்மைக்கு எதிராக சுலபமாக ஒரு சில அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் செயல்பட முடிகிறது.
அவன் அளிக்கும் அதே பாதுகாப்பினை அனுபவிக்கும் மற்றவர்கள் கை கட்டி, கண் மூடி, வாய் பொத்தி, செவி அடைத்து காந்தியின் குரங்குகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
வாழ்க சமூக நீதி.
வளர்க பாரதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.