வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

9400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுடன் வாழ்ந்த நாய்கள்

போர்ட்லேண்ட் (மெய்னி): வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்படும் விலங்கு நாய். இவற்றுக்கு மோப்ப சக்தியும் நன்றி உணர்வும் அதிகம். சுமார் 9,400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் நாயை வளர்த்து வந்துள்ளனர் என்பதும் பண்டைய கால மனிதன் நாயை உணவுக்காக பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் தற்போது தெரியவந்துள்ளது. 

மெய்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 1000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உணவுமுறை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இக்குழுவில் சாமுவேல் பெல்க்நேப் என்ற அறிவியல் ஆராய்ச்சி மாணவரும் இடம் பெற்றிருந்தார். 1970 ம் ஆண்டு டெக்சாசின் தென்கிழக்கு பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட சிறிய வித்தியாசமான எலும்பு, ஆராய்ச்சியின் இலக்கையே மாற்றி உள்ளது. இந்த எலும்பு விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதில் பல தகவல் கிட்டியுள்ளதாக பெல்க்நாப் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியது: ஆராய்ச்சிக்காக சேகரிக்கப்பட்ட எலும்புகளில் ஒன்று வித்தியாசமாக இருந்ததால் இலக்கை விட்டு மாறுபட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 

இதுவரை இந்த எலும்பு ஓநாய் அல்லது நரியின் எலும்பாக இருக்கலாம் என்றே நம்பப்பட்டு வந்தது. தற்போது இதை கார்பன் டாட்டிங் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதன் மூலம் சுமார் 9,400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயின் கால் பகுதியை சேர்ந்த எலும்பு என்பது தெளிவாகி உள்ளது. 

இது மனித செரிமான பாதையை கடந்து வந்ததற்கான ஆதாரங்களும் உறுதியாகி உள்ளது. எலும்புக்குரிய நாய் சுமார் 25 முதல் 30 பவுன்ட் எடை கொண்டதாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் நாய்கள் 9,400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுடன் வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. சிலர் அதை உணவுக்காகவும் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு பெல்க்நாப் கூறினார். முந்தைய ஆய்வுகளில் நாய்கள் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவையாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.