சனி, 26 பிப்ரவரி, 2011

தமிழை தேர்வு செய்ததால் வங்கி கடன் மறுப்பு: படிப்பிற்கு முழுக்கு போட இன்ஜி., மாணவர் முடிவு


ராமநாதபுரம் : "தமிழைத் தேர்வு செய்த இன்ஜினியரிங் மாணவருக்கு, வங்கிக் கடன் வழங்க முடியாது' என, அதிகாரிகள் கைவிரித்து விட்டதால், படிப்புக்கு முழுக்கு போடும் நிலையில் மாணவர் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது:தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.