வெள்ளி, 8 ஜூலை, 2011

எந்தவொரு உயிரினமும் வாழ முடியாத பூமியின் ஆழத்திற்குள் புதியவகைப் புழுக்கள் !

எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது எனக் கருதப்படும் பூமியின் ஆழமான பகுதியில் சில வகைப் புழுக்கள் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து உட்பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது.இதனால் அங்கு நுண்ணங்கிகள் உள்ளிட்ட எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தென்னாபிரிக்காவின் இரு தங்கச் சுரங்கங்களில் 1.3 கிலோமீற்றர் ஆழத்தில் 48 பாகை செல்சியஸ் வெப்பநிலை நீரில் (118 F ) இரு வகையான புழுக்கள் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
விஞ்ஞான ஆய்வுகளின்படி இவ்வளவு ஆழமான பகுதியில் இதுவரை எந்தவொரு ஒரு கல பக்ரீரியா கூட உயிர்வாழ்ந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கவில்லை. இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இருவகைப் புழுக்கள் தொடர்பில் அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறித்த சுரங்கங்களினுள் கண்டுபிடிக்கப்பட்ட இரு வகைப் புழுக்களில் ஒன்று புதிய வகை இனமாகும். விஞ்ஞானிகள் அதற்கு ஹலிசெவலோபஸ் மெபிஸ்ரோ எனப் பெயரிட்டுள்ளனர்.
 
மற்றையது முன்பே அறியப்பட்ட வட்டப் புழு இனமான பிலேக்ரஸ் அகுவாரிலிஸ் ஆகும். தென்னாபிரிக்காவிலுள்ள பீற்றிக்ஸ் மற்றும் ட்றீபொன்ரெய்ன் தங்கச் சுரங்கங்களினுள் காணப்பட்ட குழிகளினுள் காணப்பட்ட நீரிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இத்தகைய நீரில் பக்ரீரியாக்கள் காணப்படுகின்றபோதிலும் புழுக்கள் காணப்பட்டமையானது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் இப்புழுக்கள் குறைந்தளவிலான ஒட்சிசனுடன் வாழக்கூடிய ஆற்றலைக் கொண்டவை என ஒன்ஸ்ரொட் என்ற விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
 
மேலும் நீரில் வாழக்கூடிய இப்புழுக்கள் 3000 முதல் 10,000 வருடங்கள் வரை வாழக்கூடியவை. இப்புழுக்கள் புராண காலத்தில் புவிமேற்பரப்பிலேயே காணப்பட்டிருந்தன எனவும் பின்னர் மழை நீருடன் வெடிப்புகள் மூலமாக புவியின் ஆழப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு தற்போது அவை அங்கேயே நிரந்தரமாக வாழ்ந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.