திங்கள், 27 டிசம்பர், 2010
உலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) !!!
குவெல்டால் கோட்டில் என்பதற்கு கடவுளின் அருளை பெற்ற ஞானமுடையவன் என்று அர்த்தம்.
கி.பி 1920 முதல் 1940க்கு இடைப்பட்ட காலத்தில் மெக்சிக அரசு வாஷிங்டனின் கெண்டகி கல்வி நிறுவனத்தின் மூலம் இந்த கோட்டையைப் புதுப்பித்தது. புதுப்பிக்கப்பட்டது என்பதை விட பெரிய அளவிலான மாற்றம் கொண்டுவரப்பட்டது எனலாம்.
இதன் நான்கு பக்கங்களிலும் அகலமான படிக்கட்டுகள் அமைத்து உச்சிக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வடிவத்தின் உள்ளே பழைய பிரமிடு இருக்கிறது. அங்கே மன்னனின் அரண்மனை அமைந்துள்ளது.
வருடத்தின் முன்னூற்றி அறுபத்து ஐந்து நாட்களையும் குறிக்கும் விதத்தில் இந்த பிரமிட் 365 படிகளைக் கொண்டுள்ளது. பக்கத்துக்கு 91 படிகளாக 364 படிகள். கடைசி மேடை ஒரு படி. என மொத்தம் 365 படிகள் என கணக்கிடப்படுகிறது.
முப்பது மீட்டர் உயரமுள்ள இந்த பிரமிடின் குறுக்கு அகலம் 55.3 மீட்டர்களாகும். இதன் உச்சியில் அமைந்துள்ளது மன்னனுக்கான சிறப்புக் கோயிலாகும்.
இந்த மாயன் நாகரீக அடையாளங்கள் பிற்காலத்தின் தோன்றிய போர்களினால் அழிந்து போயிருந்தாலும் சில அடையாளங்கள் இன்னும் அந்த நாகரீகத்தின் சாட்சியாய் நிமிர்ந்து நிற்பது குறிப்பிடத் தக்கது.
இந்த எல் காஸ்டிலோ பிரமிட் கோயில் சீச்சென் இட்சா நகரின் மையத்தில் அமைந்திருப்பதே இந்த கோயிலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
கி.பி 600 களில் சிச்சின் இட்சா மிகவும் செல்வச் செழிப்பில் மிதந்த ஒரு நாடாக இருந்திருக்கிறது. எனவே இது மன்னர்களின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.
கி.பி 987ல் ஏற்பட்ட படையெடுப்புக்குப் பின் மாயன் நாகரீகத்தினரிடையே தொல்டெக் நாகரீகக் கலப்பு ஏற்பட்டிருக்கிறது.
எனவே அதன் பின் சீச்சென் இட்சாவில் நாகரீகக் கலப்பு உருவானது. மாயன் நாகரீகமும் தொல்டெக் நாகரீகமும் கலந்து வெளிப்பட்டன.
கட்டிடம் மொத்தம் ஒன்பது நிலைகளைக் கொண்டுள்ளது. இவை மாயன் நாகரீகத்தின் பாதாள உலகத்தைச் சித்தரிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரமிடின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பதின்மூன்று நிலைகள் மேல் உலகத்தைச் சித்தரிக்கிறது எனவும் அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்.
மாயன் நாகரீகம் மிகவும் செழிப்பான நாகரீகமாக இருந்திருக்கிறது என்பதன் சாட்சியாக நிற்கிறது இந்த கோட்டை. ஆன்மீகம், தத்துவம், கட்டிடக்கலை, கணிதவியல் என பலவிதமான கோட்பாடுகளை உள்ளடக்கி, மாயன் கலாச்சாரத்தை மௌனமாய் இருந்து உரக்கச் சொல்கிறது இது.
இது ஒம்பது அடுக்குகளுடனும், அடுக்குக்கு பதினெட்டு பாகங்களுடனும் அமைந்துள்ளது. இந்த பதினெட்டு என்பது மாயன் நாகரீகத்திலுள்ள 18 மாதங்களைக் குறிக்கிறது.
இந்த கோட்டையின் மேலிருந்து பார்த்தால் மேற்கு பக்கமாக மாயன் காலத்தைய மிகப்பெரிய பந்து அரங்கம் தென்படுகிறது. மாயன் காலத்தைய மிகப்பெரிய அரங்கமாக இது விளங்கியிருக்கிறது.
கோட்டையின் மேல் மாயன் மக்கள் வழிபட்ட மழை கடவுள் சாக் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோட்டைக்கு வடக்கே 285 அடி அகலமுடைய கிணறு ஒன்று காணப்படுகிறது. இதை மாயன் மக்கள் புனித அடையாளமாகக் கொண்டிருந்ததாக கருதப்படுகிறது.
மெக்சிகோ நகரில் அமைந்துள்ள இந்த எல்காஸ்டிலோ உலக அதிசயங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதுவே மாயன் கால மக்களின் திறமைக்கும், அவர்களுடைய அடையாளங்களுக்கும் கிடைத்த உலக அங்கீரமாய் கருதிக் கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.