ராட்சஸ வேகத்தில் வளர்ந்து வரும் இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிரிகளாகி விடும் என்று பயப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
இதை ஒரு உதாரணம் மூலமாக அவர்கள் தெளிவாக விளக்குகின்றனர். இன்று கம்ப்யூட்டர் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் புகுந்து விட்டது. கம்ப்யூட்டர் அனைத்தும் உலகில் ஒரு நாள் வேலை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். மனித வாழ்க்கையே உலகில் ஸ்தம்பித்து விடும். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு இது போல கம்ப்யூட்டர் உலகெங்கும் வேலை செய்யவில்லை என்றாலும் மனித வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது. ஒரு சில விஞ்ஞானிகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பர்.
ஆக இன்று நம்மை கம்ப்யூட்டர் ஆதிக்கம் செல்லும் நிலைக்கு வந்து விட்டோம். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்துமே கம்ப்யூட்டர் தரும் தகவல்களின் அடிப்படையில் தான் என்று ஆகி விட்டது!
இனிமேல் நடக்கப்போவது என்னவெனில் இந்த இயந்திரங்களை நம் உடலுக்குள்ளேயே நாம் செலுத்திக் கொள்ளப் போகிறோம், அவ்வளவு தான்!
இது வரை, மனித உடல் வேறு, இயந்திரங்கள் வேறு என்று தனித் தனியே இருந்தது. இனி அப்படி இருக்காது. மனிதனும் இயந்திரமும் சங்கமமாகி விட்ட நிலையில் மனிதன் - இயந்திரம் ஒன்றாகவே ஆகி விடும்!
இந்த இயந்திரங்களே மூளையில் நமது சிந்தனா செல்களைத் தூண்டி விட்டு தக்க முடிவுகளை எடுக்கத் தூண்டும்!
இந்த மனிதன்-இயந்திரம் நாகரிகம் நம்மாலேயே உருவாக்கப்படுவதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸாவில் அமிஸ் ரிஸர்ச் சென்டர் (Ames Research Centre) என்று ஒரு ஆய்வு மையம் உள்ளது. இதில் பிரபல ஆராய்ச்சியாளரின் பெயர் சக் ஜோர்கென்ஸன்.(Chuck Jorgensen) ஜோர்கென்ஸனும் அவரது சகாக்களும் அற்புதமான ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனித குரல்வளையில் உள்ள வோகல் கார்ட் எனப்படும் குரல் நாணில் உள்ள நரம்பு செல்களில் உருவாக்கப்படும் சிக்னல்களைப் பிடித்து அதை அப்படியே கம்ப்யூட்டரில் பேச்சாக ஒலிக்கச் செய்யும் முயற்சியே இவர்களது ஆராய்ச்சி!
பேச முடியாதவர்களுக்கு இது பெரிதும் துணை செய்யும். அவர்கள் பேச நினைத்ததை கம்ப்யூட்டர் தனது ஸ்பீக்கர் வாயிலாக ஒலிக்கச் செய்து விடும்.
அது மட்டுமின்றி விண்வெளியில் ஸ்பேஸ் சூட்டுடன் உள்ளவர்களுக்கும், மிக மிக அதிகமான இரைச்சல் உள்ள இடங்களில் பேச வேண்டியவர்களுக்கும் இது நல்ல பயனைத் தரும்.
மூளை தரும் சிக்னல்கள் மனித குரல்வளையில் உள்ள குரல் நாண்களை என்ன பேச வேண்டுமோ அதைப் பேச இயக்குகின்றன. இந்த சிக்னல்களை கம்ப்யூட்டர்கள் தெரிந்து கொள்ளும், பேசும், அவ்வளவு தான்!
இந்த விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?
மனம் மனதோடு தொடர்பு கொண்டு பேசும் டெக்கில்பதி என்பது தான்! இதுவும் எதிர்காலத்தில் சாத்தியமே என்று ஜோர்கென்ஸன் கூறுகிறார்.
மனித பிரக்ஞையைக் கடந்து தொலைதூரத்தில் உள்ளவர்களோடு மனிதன் பேச முடியும் என்பது ஆச்சரியமான செய்தி! இப்படி ஒரு விஷயத்தை காலம் காலமாக மனித குலம் கனவு கண்டு வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட மனம் மனதோடு தொடர்பு கொள்ளும் நாள் வரும்போது மனித நாகரிகமே முற்றிலுமாக மாறி விடும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
PLASE COMMEND IT.