வெள்ளி, 28 ஜனவரி, 2011

தமிழர்கள் என்ன இந்தியாவின் குடிமக்களா அல்லது சம்பாதித்து வரிப்பணம் செலுத்தும் அடிமைகளா?






இந்தியாவின் 62-ஆவது குடியரசுத் திருநாள். இன்றைக்கு சில  நாட்களுக்கு முன்புதான் இந்தியப் பெருங்கடலில் தமிழ் மீனவர் ஜெயக்குமார் இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.


மீனவர் வீரபாண்டியனின் குருதியால் சிவந்த கடல் நீர் நிறம் மாறுவதற்குள் இதோ மேலும் ஒரு கொலை! வீரபாண்டியன் கொலை பற்றிய செய்தியையே தமிழ்நாட்டின் முன்னணி நாளேடான தினத்தந்தி 10-ஆம் பக்கத்தில்தான் வெளியிட்டது.

ஒரு நாட்டின் குடிமக்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்தால் தாக்கப்படுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? ஆனால் உள்ளூர்ப் பத்திரிகையிலேயே 10-ஆம் பக்கத்தில் வெளியிடுகிற அளவுக்கு இங்கு இது ஒரு சர்வசாதாரண நிகழ்வாகி விட்டது. ஆனால் இதற்காக அந்த நாளேட்டின் மீது குறை கூற ஏதும் இல்லை. பங்குச் சந்தை நிலவரம், தங்க விலை ஏற்ற இறக்கம், வானிலை அறிக்கை போல தமிழன் மீதான தாக்குதலும் இன்று ஓர் அன்றாடச் செய்தியாக ஆகிவிட்டது!

வழக்கம் போல் இந்த முறையும் மாநில அரசும், நடுவணரசும் இதற்காகப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறது மாநில அரசு. வேண்டுமானால் உண்மைத் தமிழ் உணர்வாளர்களும், தமிழ் மீனவர்களும் ஒன்று சேர்ந்து, தங்களுக்குள் நிதி திரட்டி, இதை விட மேலும் ஐந்து லட்சம் சேர்த்துப் பத்து லட்சமாகவே தரலாம். அதை வாங்கிக் கொண்டு இறந்த மீனவர் ஜெயக்குமாரின் உயிரை மீட்டுத் தர முடியுமா என்று கூடக் கேட்கவில்லை; மாறாக இனி இப்படி ஒரு கொடுமை நடக்காது என்று உறுதி கூற முடியுமா இந்த மாநில, நடுவண் அரசுகளால்?

எத்தனை பேர் வேண்டுமானாலும் சாவுங்கள் நாங்கள் பணம் தந்து விடுகிறோம் எனச் சொல்வதா ஒரு நாட்டின் கடமை? ஒரு நாட்டின் வெகு அடிப்படையான கடமையே தன் குடிமக்களைக் காப்பாற்றுவதுதான். அதற்காகத்தான் தரைப்படை, கடற்படை, வான்படை எல்லாம். இதே இந்திய அரசுக்குத் தன் மீன்பிடித் திறனால் பல லட்சக்கணக்கான கோடிகளை அந்நியச் செலாவணியாய் ஈட்டித் தந்தவன், தந்து கொண்டிருப்பவன் தமிழ் மீனவன். இந்திய ராணுவம் வாங்குகிற ஒற்றைத் தோட்டாவிலிருந்து மாபெரும் விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் வரை அனைத்திலும் தமிழ் மீனவனுக்கும் ஆறு கோடித் தமிழர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. ஆனால் இதுவரை தமிழ் மீனவனைக் காப்பாற்றுவதற்காக ஒரே ஒரு தோட்டாவையாவது இந்தியக் கடற்படை செலவிட்டது உண்டா?

இந்திய ராணுவம் பீரங்கி வாங்க, போர்க் கப்பல் வாங்க, புதிது புதிதாக அணுகுண்டு ஆராய்ச்சி செய்ய, விதம் விதமாக ஏவுகணைகள் தயாரிக்க என எல்லாவற்றுக்கும் தமிழ் மீனவன் ஈட்டித் தரும் அந்நியச் செலாவணிப் பணம் வேண்டும். ஆனால் அந்தத் தமிழ் மீனவனைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இந்தியக் கடற்படை ஒருமுறை கூட முன்வராது என்றால்… தமிழர்கள் என்ன இந்தியாவின் குடிமக்களா அல்லது வெறுமனே சம்பாதித்துத் தரவும் வரிப்பணம் கட்டவும் மட்டுமே கடமைப்பட்ட அடிமைகளா?

பத்து காசு சில்லறை பாக்கியைப் பேருந்து நடத்துநர் தராமல் விட்டு விட்டால் உடனே நீதிமன்றத்துக்குப் போய் வழக்குத் தொடுத்துப் பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு பெறுகிறோம். காலாவதியான ஒரு மிட்டாயை விற்றால் கூட அந்தக் கடைக்காரன் மீது வழக்குப் போட்டு அந்தக் கடையையே இழுத்து மூடச் செய்கிறோம். வெறும் நுகர்வோர் உரிமைகள் மறுக்கப்பட்டாலே இவ்வளவு குதிக்கும் நாம், ஒரு குடிமகனுக்கான அடிப்படை உரிமையையே மறுக்கிற இந்தப் பிரச்சினை பற்றி இதுவரை அரைக்காசுக்காவது கவலைப்பட்டிருப்போமா, சிந்தித்திருப்போமா?

அது சரி, பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீனவர் வீரபாண்டியன் கொல்லப்பட்டார். அதற்காகப் பொங்கல் கொண்டாடாமலா இருந்துவிட்டோம்? தித்திக்கத் தித்திக்க நன்றாகத்தானே பொங்கிச் சாப்பிட்டோம்?

இதோ, குடியரசு நாளுக்கு இரண்டு நாட்கள் இருக்கும்பொழுது மறுபடியும் ஒரு மீனவர் கொலை! கலைஞர் தொலைக்காட்சியில் குடியரசு தினச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்போம்! குடியரசைப் போற்றுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PLASE COMMEND IT.